Latest News

பேனர் விழுந்து முதியவர் காயம் – தவெகவினருக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு

By Jayakumar
24 Jun 2025, 07:43 PM
சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

இதேபோல் தவெக தலைவர் விஜய் பிறந்தநாளுக்கு அங்காங்கே உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் முறையான அனுமதி பெற்றும் சில இடங்களில் காவல்துறையினர் பேனர்களை அகற்ற கட்டாயப்படுத்தியதாகவும் தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் எந்த காரணத்திற்காகவும், தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்கக்கூடாது

இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ. விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை. நம் வெற்றித் தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவரின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.